11 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்படும் மலேசிய விமானம்!

0
19

கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல்போன மலேசியாவை சேர்ந்த எம்.ஹெச்.370 ரக விமானத்தை சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி மீண்டும் தொடங்கியது. 

மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், திடீரென்று காணாமல் போனது. மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து தேடி ஆயிரம் நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட OCEAN INFINITY என்ற நிறுவனம், எம்.ஹெச்.370 விமானத்தை தேடும் பணியை தொடங்கி இருப்பதாக மலேசியாவின் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “எம்ஹெச்370 விமான தேடுதலில் மீண்டும் ஈடுபட கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்காவின் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் முன்வந்துள்ளது.

நிறுவனத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால் புதிய தேடுதல் வேட்டைக்கு ஒப்புதல் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற பேச்சுவார்த்தையில் இதுவரை நாங்கள் ஈடுபடவில்லை” என்று தெரிவித்தார்.

மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணிக்கு கடந்த டிசம்பரில் மலேசிய அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விமானத்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இன்று வரை அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் 1,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் அந்த விமான பாகங்களைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவில் இருந்து விமானங்களைக் கண்டறியும் பிரபல கப்பல் நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் விமான பாகங்கள் எவற்றையும் அது கண்டுபிடிக்கவில்லை.