மைத்திரிபால-அனந்தி சந்திப்பு: முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு

0
313

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண சபை மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவியுமான அனந்தி சசிதரன் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்றைய தினம் (30.06.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல்

அந்த வகையில் அனந்தி சசிதரன் மரியாதை நிமித்தமாக மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது வடமாகாண மகளிர் உரிமைகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், காணாமல் போனவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், யாழ். பொது நூலகத்துக்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

மைத்திரியை வரவேற்ற ஆணையாளர் 

நூலகத்திற்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனாவை யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் வரவேற்றுள்ளதுடன் அத்தோடு பொது நூலகத்தின் வாசகர் பகுதி, வாசிப்பு பகுதி, தகவல் தொழில்நுட்பப் பகுதி, சிறுவர் பகுதி மற்றும் மாநாட்டு மண்டபத்தையும் பார்வையிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வுகளின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த சமீர் மச்சான் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோகச் செயலாளர் சிவராம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.