பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் நிலவும் உலகளாவிய ஊழல் வலையமைப்பை ராஜபக்ச குடும்பமே கட்டுப்படுத்துகிறது. அவர்களின் சலுகைகளைப் பறித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
தான் நீதி அமைச்சராக இருந்தால் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுத்துச் சென்ற பெறுமதியான பொருட்களை 24 மணி நேரத்திற்குள் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்வேன்
2009 போரின் முடிவு 10 கிலோமீற்றம் தூரத்தில் இருந்தபோது மகிந்த ராஜபக்ச ஏன் போர்நிறுத்தத்தை அறிவித்தார் என்று நாட்டுக்கு விளக்க வேண்டும். அது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அவர் இந்த முயற்சிகளை மேற்கொண்டார். 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார்.
நாங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போராடுகிறோம், ஆனால் அவர் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு பணத்தை கொடுப்பது தேசத்துரோகம் இல்லையா? மற்ற நாடுகளாயின் மகிந்த ராஜபக்ச கடுமையான தண்டனைக்கு ஆளாகியிருப்பார். எமது அரசியலமைப்பின் படியும் அவருக்குரிய தண்டனை தூக்குத் தண்டனையே என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.