இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதை வேண்டுமானால் கூறட்டும். அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமும் நாடாளுமன்றமும் தான் முடிவெடுக்கும் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்தின்போது 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இலங்கை அரசு செய்யும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் மோடி ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பந்துல குணவர்த்தன கருத்துத் தெரிவித்தபோது, “13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும் இன்று அல்லது நாளை செய்யக்கூடிய விடயங்கள் அல்ல.

இலங்கையில் தமிழ் மக்கள்
அவை தொடர்பில் அரசும், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றமும்தான் முடிவெடுக்கும்.
இலங்கையில் தமிழ் மக்கள் மட்டும் வாழவில்லை. இங்கு வடக்கு, கிழக்கு என்பன மட்டுமே மாகாணங்களும் இல்லை. மூவின மக்கள் வாழும் இந்த நாட்டில் 9 மாகாணங்கள் உள்ளன.
எனவே, எந்தவொரு இன மக்களையும் பாதிக்காத வகையிலும், எந்தவொரு மாகாணத்துக்கும் பிரச்சினைகள் வராத வகையிலும் அரசு தனது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது” என தெரிவித்துள்ளார்.