இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 11 வயது சிறுவனிடம் பந்தை எறியும்படி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வருடத்திற்கான T20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெருகின்றன. இதனால் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முன்னதாக பெர்த் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, 11 வயது சிறுவன் ஒருவனுடைய பவுலிங் திறமையை பார்த்து பாராட்டிய ரோஹித் ஷர்மா தனக்கு பந்துவீசுமாறு சிறுவனிடம் கேட்டிருக்கிறார்.
அதனை தொடர்ந்து அந்த சிறுவனும் ரோஹித்திற்கு வந்து வீசியிருக்கிறார். இதுகுறித்து இந்திய அணியின் வீடியோ அனாலிசிஸ்ட் (video analyst) ஹரி பிரசாத் மோகன் பேசுகையில், “நாங்கள் பயிற்சிக்காக WACA க்கு வந்தோம். அங்கே குழந்தைகள் தங்கள் காலை பயிற்சியை முடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் டிரஸ்ஸிங் அறைக்குள் நுழைந்தவுடன் 100 குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிந்தது. ஒரு சிறுவனின் பந்துவீச்சு அனைவரின் கண்களையும் கவர்ந்தது. ரோஹித் தான் சிறுவனை முதலில் அடையாளம் கண்டுகொண்டார். அவர் வீசிய இரண்டு மூன்று பந்துகளை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ரோஹித் டிரஸ்ஸிங் அறையை விட்டு வெளியே சென்று சிறுவனை இன்னும் சில பந்துகளை வீசச் சொன்னார். ரோஹித் சர்மா அந்த சிறுவனை தனக்கு பந்து வீசுமாறு அழைத்தார். பார்க்க ஒரு சிறந்த காட்சியாக அது இருந்தது. அந்த சிறுவன் இந்திய கேப்டனுக்கு பந்து வீசியது மறக்க முடியாத தருணம்” என்றார்.
திருஷில் எனும் அந்த சிறுவனை இந்திய அணியின் டிரஸிங் ரூமிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் அதிகாரிகள். அப்போது, இந்திய அணி வீரர்களுடன் சிறுவன் கலந்துரையாடியுள்ளான். அப்போது இந்திய அணிக்காக விளையாடுவதே தனது லட்சியம் என சிறுவன் கூறியிருக்கிறான்.
தற்போது பெர்த்தில் வசிக்கும் திருஷிலிடம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,”நீ பெர்த்தில் வசித்தால் எப்படி இந்தியாவிற்காக விளையாடுவாய்? என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த அந்த சிறுவன்,”நான் இன்னும் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு இந்தியா திரும்புவேன்” எனக் கூறியிருக்கிறான். இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு பலரும் சிறுவன் திருஷிலின் திறமையை பாராட்டி வருகின்றனர்.