உங்களிடமிருந்து கற்றோம் : இலங்கை போராளிகளுக்கு நன்றி : வங்கதேசத்திலிருந்து வந்த அறிவிப்பு

0
86

பங்களாதேஷின் (Bangladesh) நாடாளுமன்றத்தை கைப்பற்றிய பின்னர் இலங்கை போராட்டக்காரர்களுக்கு பங்களாதேஷ் ஆர்ப்பாட்டக்காரர்கள் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தான் இதனை அறிந்து கொண்டதாக அந்நாட்டு போராளி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் விடுதலை போராட்ட வாரிசுகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்து மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை சென்றது. தற்போது இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் ஆர்ப்பாட்டம் ஓய்ந்தபாடாக இல்லை.

நேற்று(06) அப்பாவி பொதுமக்கள் 24 பேரை கலவரக்காரர்கள் உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். மேலும் ஹேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஷஹீன் சக்லதாருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் இடங்கள் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது.

அந்நாட்டில் சிறுபான்மையிருக்கு எதிரான வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கணக்கான இந்து வீடுகள் மற்றும் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக பங்களாதேஷின் இந்து சங்கம் தெரிவித்துள்ளது.