கஞ்சிபானை தப்பிச் செல்ல சட்டத்தரணிகளே காரணம்: டிரான் அலஸ் குற்றச்சாட்டு

0
115

பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் கஞ்சிபானை இம்ரான் மற்றும் கணேமுல்லே சஞ்சீவ ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அவர்களது சட்டத்தரணிகள் உதவியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அந்த சட்டத்தரணிகள் தான் அவர்களை வெளியேற்றினார்கள். நீதிமன்றத்தில் இருந்தே அழைத்துச் சென்று வெளியேற்றி விட்டனர். இப்போது அவர்களை கைது செய்த பின்னர் கதையை நன்றாகவே கூறுகிறார்கள். பாதி வழியில் சென்று வேறு ஒருவரிடம் ஒப்படைத்தார். மீண்டும் படகில் ஏற்றினர், என தெரிவித்து வருகின்றனர்.” எனறு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 19 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள்களை பொலிஸார் கைப்பற்றியதாகவும் 955 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். யுக்திய நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.