கிளிநொச்சி கரிநாள் ஆர்ப்பாட்டம்; பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறீதரன்..! பல்கலைக்கழக மாணவர்கள் கைது

0
285

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடந்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடந்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நீர்த்தாரை பிரயோகம் 

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் ; பொலிஸார் தாக்கப்பட்ட சிறீதரன் | Sridharan Attacked During Black Day Protests

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீது நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி சாலை மறியல் போராட்டமும் ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி – இரணைமடு சந்தியிலிருந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ள என 5 பேருக்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.

அதனை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.