ஜஸ்டின் ட்ரூடோவைக் காதலிக்கும் கேற்றி பெர்ரி; கனடாவுக்கு குடிபெயர வாய்ப்பு உள்ளதா?

0
21

கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே. இந்நிலையில் ட்ரூடோவுடன் வாழ்வதற்காக, பெர்ரி கனடாவுக்கு குடிபெயர வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் பிரபல கனேடிய ஊடகம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேற்றி பெர்ரி கனடாவுக்கு குடிபெயர பல தடைகள் உள்ளன. முதலாவதாக பெர்ரி கனடாவில் நிரந்தர புலம்பெயர்தல் அந்தஸ்தைப் பெறவேண்டும்.  பெர்ரி கனேடிய வம்சாவளியைக் கொண்ட அமெரிக்கர்களில் ஒருவராக இருந்திருந்தால், அவர் பரம்பரை வழியாக கனேடிய குடியுரிமையைக் கோரி அதற்கான ஆதாரத்திற்கு விண்ணப்பித்திருக்கலாம்.

கனடாவில் நிரந்தர அந்தஸ்தைப் பெறுவதற்கான மிகவும் எளிதான நேரடியான வழி இதுதான். ஆனால் பெர்ரி கனேடிய வம்சாவளியினர் இல்லை. ஆகவே மற்ற வெளிநாட்டவர்களைப் போலவே அவரும் கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு (PR) விண்ணப்பிக்க வேண்டும்.

பெர்ரி எப்படி கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்?

பொருளாதார புலம்பெயர்ந்தோராக நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான வாய்ப்புகள் பெர்ரிக்கு குறைவாகவே இருக்கும்.  கனடாவின் புலம்பெயர்தல் விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்கான முதன்மை அமைப்பான எக்ஸ்பிரஸ் நுழைவு முறை மூலம் அவர் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு முயற்சித்தால் அதற்கான விண்ணப்ப அழைப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.

ஒரு கனேடிய குடிமகன் என்ற முறையில் ட்ரூடோவால் தனது துணையை நிரந்தர குடியிருப்புக்காக ஸ்பான்சர் செய்யமுடியும். ஆனால் அவர் தனது துணைக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கும் திறனை நிரூபிக்க வேண்டும்.

ஆக, ட்ரூடோவும் பெர்ரியும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டால் ட்ரூடோ அவருக்கு ஸ்பான்சர் செய்ய வாய்ப்புள்ளது. பெர்ரியின் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும்போது அவர் கனடாவிற்குள் நுழைவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

பெர்ரி தனது நிரந்தர வசிப்பிட விசாவைப் பெறும் வரை ஒரு விசிட்டராக கனடாவிற்குள் நுழைய விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர் தற்காலிக வசிப்பு நோக்கத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது அனுமதிக்கப்பட்ட காலத்தின் முடிவில் கனடாவை விட்டு வெளியேற அவர் திட்டமிட்டுள்ளார் என்பதை அவர் குறிப்பிட வேண்டும்.

ஒரு வெளிநாட்டவர் தனது வாழ்க்கைத் துணையைச் சந்திக்க கனடாவிற்குள் பயணம் செய்யும்போது அவர் உண்மையிலேயே தனது சொந்த நாட்டிற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து புலம்பெயர்தல் துறை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும்.

பெர்ரி, கனடாவில் நிரந்தர குடியிருப்பாளராக குடியேறும் நோக்கத்தையும், தற்காலிக வசிப்பாளராகத் தனக்கு அங்கீகரிக்கப்பட்ட தங்கும் காலம் முடிந்ததும் கனடாவை விட்டு வெளியேறும் நோக்கத்தையும் ஒரே நேரத்தில் கொண்டிருக்கிறார் என்பதை அதிகாரியிடம் நிரூபிக்க வேண்டும்.

மேலும், அமெரிக்காவுடனான தனது தொடர்புகள், குடியிருப்பு முகவரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் குறித்த விவரங்களை தெரியப்படுத்துவதன் மூலம் அவர் தனது தற்காலிக குடியிருப்பு நோக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

விடயம் என்னவென்றால் பெர்ரியின் தற்காலிக குடியிருப்புக்கான நோக்கத்தில் புலம்பெயர்தல் துறை அதிகாரிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றால் அவர் பெர்ரிக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கக்கூடும்.