கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

0
25

தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தமிழகத்தில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாநிலம் தழுவிய கடையடைப்பில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் குற்றப் புலனாய்வு விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரண்டு மனுக்களின் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. கரூரில் நேற்று முன்தினம் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கரூர் அரச வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே கரூர் கூட்டத்தின்போது நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றும் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமாக த.வெ.க கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியும் மதுரை உயர் நீதிமன்றில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கரூர் துயர சம்பவத்துக்கு காரணமான நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.