தவெக தலைவர் விஜய் இனி ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் திகதி கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் பலியாகினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் கரூர் கூட்ட நெரிசலில் பாதித்த மக்கள், உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் அருகே அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
அந்த இடத்தில் அனுமதி கொடுக்காமல் இருந்ததற்கு நன்றி தான் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் பண்பான தலைவராக இந்த விஷயத்தில் நடந்திருப்பது பெருமையாக உள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால், இதைப்பற்றி அதிகம் பேச முடியாது. காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நானும் அப்படி வந்துள்ளேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள்.
செந்தில் பாலாஜிக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஏன் வந்தார் என கேட்பதை விட, வந்தார் என்பது முக்கியம். அது அவரின் பகுதி. அவர் வீடு இருக்கும் பகுதி. அவர் ஊர்.. அவர் மக்கள்.
மேற்கோண்டு உயிர் சேதம் ஏற்படுத்தாமல் காப்பாற்றிய பாலாஜிக்கு நன்றி. இந்த விஷயத்தை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை சொல்லும்.
இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழுத்தமான சட்டத்தை, நாட்டுக்கே முன் உதாரணமாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு மீண்டு எழ வேண்டும் என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் அடுத்த வாரம் கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக விஜயை கைது செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தொடர்பாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்கு பாய்ந்தது.
கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கைது செய்ய நேரிட்டால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வதே முக்கியமானது. கரூரில் 41 பேர் பலியானது சாதாரண விடயமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த சம்பவத்திற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் காவல்தறை பாதுகாப்பு காவல்துறை பாதுகாப்பு அளித்தோம். அத்துடன் நிபந்தனைகளை விதித்து ஆலோசனை வழங்கினோம். எங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே என அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் காணொளியில் கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்ததது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்ல இருக்கிறார். இதற்காக முறையாக நீதிமன்றத்தில் மனு செய்து, அனுமதி கேட்கப்பட உள்ளது.
நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.