கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிடு செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றின் மதுரைக்கிளை அறிவித்துள்ளது.
சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

கச்சத்தீவு மீட்பு மனு தாக்கல்
அவரது மனுவில் ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்த நிலையில் 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் அங்கு செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கையில் தாக்கப்படுவதுடன் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, 1974-ம் ஆண்டில் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவை பிறப்பிக்குமாறு த. பீட்டர்ராயன் கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய குழாமின் அமர்வில் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே இந்த வழக்கை மேலும் முன்கொண்டு செல்ல முடியாது என அறிவித்து மனுவை சென்னை உயர் நீதிமன்றின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.