அரகலய காலகட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற திட்டமிட்டிருந்ததாக அதன் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது இன்று புதன்கிழமை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மக்களை நாடாளுமன்றத்திற்கு வரச் சொன்னவர்கள் நாங்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் விட்டுச் சென்றதால் அதனைச் செய்ய முடியாது என லால்காந்த தெரிவித்துள்ளார். அன்று ஜே.வி.பி போராளிகளால் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முடிந்திருந்தால் இன்று இலங்கையிலும் அதே நிலைமை ஏற்பட்டிருக்கும்.
இன்று பங்களாதேஷ் அராஜகமாகவும், இரத்த நதியாகவும் மாறிவிட்டது. நாடு முழுவதும் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. அவ்வாறானதொரு நிலையை உருவாக்கவே தான் அங்கு இருந்ததாக லால்காந்த கூறுகிறார்
அநுரவுடன் ஒப்பந்தம் இல்லை என்றால் சட்டத்தை இப்போதே அமுல்படுத்த வேண்டும்.குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமே. நாடாளுமன்றத்தை கைப்பற்றி பேரழிவை ஏற்படுத்த தயாராகி விட்டதாக லால்காந்த தெரிவித்துள்ளார்.
லால்காந்த உண்மையான மனிதர் மற்றவர்களைப் போல் அல்லாது அவர் உண்மையை கூறுகிறார்.தற்போது உண்மை வெளிவந்துள்ளது. நாடாளுமன்றத்தை கைப்பற்ற திட்டமிட்டதற்காக அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பிற்கு சட்டம் பயன்படுத்தப்பட்டால் அரசாங்கம் லால் காந்தாவை கைது செய்ய வேண்டும்” என்றார்.