சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை வந்துள்ள அவர் நீதி மன்ற உத்தரவுக்கு அமைவாக 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெரோம் பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வரும் போது அவரை விமான நிலையத்திலோ அல்லது வேறு எங்கும் வந்தாலோ அவரை கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் (தலைவர்) நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரைஸ் ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
மேலும் அவர் இலங்கைக்கு வந்தடைந்ததும் 48 மணி நேரத்திற்குள் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் பெறுமாறும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.