அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி பணத்தை பறித்த இந்தியர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த குராவ்ஜித் ராஜ் சிங். 27 வயதான இவர் கடந்த 2020-ம் ஆண்டு மத்தியில் அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வந்த சமயத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டார்.
அதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய குராவ்ஜித், தொற்று பரவாமல் தவிர்க்கும் கவச உடைகளை வழங்குவதாக கூறி நோயாளிகளிடம் பணத்தை பெற்றுள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு கவச உடைகளை வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இப்படி அவர் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.75 கோடியே 5 லட்சம்) வரை சுருட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் அதே ஆண்டு குராவ்ஜித் கைது செய்யப்பட்டு அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது.
இதில் குராவ்ஜித் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அவருக்கு 46 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.