இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம்; இலங்கைத் தூதரகம் அகற்றம்!

0
46

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஈரானின் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரக நடவடிக்கைகள் வேறு ஒரு இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கியிலான தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதுடன் மற்றைய மூவரின் நிலை மோசமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் காயமடைந்த அனைவரும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் என்பதுடன் அவர்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை ஆராய தூதரகம் தலையிட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சுமார் இருபதாயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும் 35 இலங்கையர்கள் ஈரானில் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அவர்களில் 8 பேர் ஈரானியர்களை மணந்தவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் இலங்கையர்களை அந்நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் வெளியுறவு அமைச்சு தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

நாங்கள் தற்காலிகமாக இஸ்ரேலில் வேலைக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டோம், விடுப்பில் இருப்பவர்கள் திரும்பி செல்லவும் தற்போதைக்கு வாய்ப்பில்லை. விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரியுள்ளோம்.

அதைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நேரத்தில் இஸ்ரேலுக்குச் செல்வதும் ஆபத்தானது. இஸ்ரேலுக்குச் சென்ற 10 பேர் துபாய் விமான நிலையத்தில் இருந்தனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தோம்.

இஸ்ரேலில் பணிபுரிபவர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வர விமானம் அனுப்புவது கடினமான பணியாகும். இருப்பினும் ஜூம் தொழில்நுட்பம் மூலம் தூதர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றும் கூறினார்.