நீடித்துவரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு உலகநாடுகளின் வலியுறுதிவரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கியமான மையத்தைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டளை மையத்தைக் கண்டுபிடித்தது, இஸ்லாமிய போராளி அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதில் மிக முக்கியமான படி என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
20 ஆயிரம் மக்கள் பலி
அதோடு இது ஆயுதங்கள் மற்றும் ராணுவப் பொருள்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளின் மையமாக இது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு மிக முக்கியமான இந்தச் சுரங்கப்பாதைகளை அழிப்பதே நடத்தப்படும் தாக்குதல்களின் முக்கிய நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஹமாஸின் முக்கியத் தலைவர் மற்றுமொரு தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி கைதிகளை பரிமாற்றுவதற்கான பேச்சு வார்த்தைகளுக்காக எகிப்திற்கு சென்றுள்ள நிலையில், இஸ்ரேல் போரில் தனக்கு முன்னேற்றம் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 20 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்காவும் தாக்குதல்களை குறைத்துக் கொள்ளுமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எனினும் இஸ்லாமியப் போராளி அமைப்புகளை அழிக்காமல் இந்த போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துவந்தது.