இலங்கையை தெற்காசியாவின் யுக்ரேனாக மாற்ற ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? – பேராசிரியர் சரித ஹேரத்

0
234

தவறான வெளிவிவகார கொள்கை மற்றும் இராஜதந்திர உறவுகளை நிர்வாகிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் இலங்கை தெற்காசியாவின் யுக்ரேனாக மாறும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் இலங்கை ஒரு சுதந்திர நாடாக இன்றி இந்திய நாடாக மாறத் தயாராகி வருவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகளால் எந்த பிரச்சினையும் இல்லை என்கின்ற போதும், இந்தியாவுடனான உறவை தற்போதைய அரசாங்கம் நிர்வகிக்கும் முறை தொடர்பில் கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கோ அல்லது மக்களுக்கோ அறிவிக்கவில்லை எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பில் என்ன நடந்தது என்பதை ஜனாதிபதியோ அல்லது மின்சக்தி அமைச்சரோ நாட்டுக்கு தெரிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சட்டத்தின் படி மின்சார சபையினால் மட்டுமே மின்சாரரத்தை விநியோகிக்க முடியும் என்றபோதும் அதனை அதானி குழுவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இரண்டு துணை மின் நிலையங்களின் கொள்ளளவை விரிவுபடுத்தும் நோக்கில் அமைச்சரவை பாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளாதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதார வேலைத்திட்டம் இல்லை எனவும் ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டங்கள் தெப்போது காலாவதியாகிவிட்டதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டுக்கு புதிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் தேவையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடி ஒரு பொது மேடையை உருவாக்கி இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு தேவையான அனைத்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.