பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார்.
அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பள்ளி ஆசிரியராக இருந்தார். மேக்ரான் தற்போது பிரான்சின் அதிபராக இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தில் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே மேக்ரான் ஒரு வினோதமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேக்ரான் உடைய மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் பல காலமாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த சர்ச்சை 2017 இல் பிரான்சில் தொடங்கியது. நடாஷா ரே என்பர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பிரிஜிட் மேக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார்.
மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் வீடியோவில் நடாஷா கூறியிருந்தார். இது தொடர்பான அவதூறு வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மேக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார். அவருக்கு எதிராக மேக்ரான் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கின் ஒரு பகுதியாக பிரிஜிட் மேக்ரான் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மேக்ரானின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார்.