எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர போட்டியிலிருந்து விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், இதுபற்றி அவருடைய ஊடகப் பிரிவிடம் வினவிய போது, சம்பந்தப்பட்ட தகவல்கள் முற்றிலும் போலியானது எனக் கூறியதுடன், திலித் ஜயவீர நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்தது.
19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள், பல்வேறு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைவின் கீழ் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டு பிரசார நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கூட்டணியின் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிதிதுரு ஹெல உருமய கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளன. இந்தப் பின்புலத்திலேயே திலித் ஜயவீர தேர்தல் போட்டியிலிருந்து விலக உள்ளதாக போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
