இரணைமடு சம்மேளனத்தின் சவால்; எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக மனு கையளிப்பு

0
28

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தங்கள்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பிரதிநிதிகள் மாவட்ட அரச அதிபரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

கடந்த 2026 பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தங்களின் சம்மேளனத்துக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய கூட்டத்திற்கு சம்மேளன பிரதிநிதிகள் அழைக்கப்படாததால் தங்களின் தரப்பை விளக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத விடயங்கள் தொடர்பாக ஆவணங்கள் இன்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது அமைப்பு 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், வங்கி நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தப் பணிகளுடன் முழுமையான செயற்பாட்டு அமைப்பாக இயங்கி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2019ஆம் ஆண்டுக்கான நிதி தொடர்பில் எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவறான புரிதலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை எனவும் அவை நடைமுறை அல்லாத அசையாத சொத்துகளின் பெறுமதியைக் கொண்ட கணக்குப் பதிவுகள் எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்களுக்கு உரம் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் தங்களது சம்மேளனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக நிராகரிப்பதுடன், அவற்றுக்கான ஆவணரீதியான சான்றுகளை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாகவும், தங்களது தரப்பை விளக்க வாய்ப்பு வழங்குமாறு கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றம், சி. சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யெ. றஜீவன் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.