LPL, லங்கா T10 தொடர்களுக்கான புதிய அணிகள் அறிமுகம்!

0
178

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தொடரில் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அணியான கோல் மார்வல்ஸ் அணி தங்களுடைய சின்னம் (logo), ஜேர்சி மற்றும் ஐகோன் வீரரை நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

கோல் மார்வல்ஸ் மற்றும் மொரட்டு மார்வல்ஸ் அணிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (11) கொழும்பில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது கோல் மார்வல்ஸ் அணியின் சின்னம் மற்றும் ஜேர்சி வெளியிடப்பட்டது. அதேநேரம், அணியின் ஐகோன் வீரராக இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பெயரிடப்பட்டதுடன், தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் லான்ஸ் குலூஸ்னர் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை மார்வல்ஸ் குழுமமானது LPL தொடரில் மாத்திரமின்றி இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள லங்கா T10 தொடருக்கான அணியொன்றையும் வாங்கியுள்ளது. மொரட்டு மார்வல்ஸ் என்ற பெயரில் களமிறங்கவுள்ள இந்த அணியின் சின்னம் மற்றும் ஜேர்சியும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டிருந்தது.

அதுமாத்திரமின்றி மொரட்டு மார்வல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த நிகழ்வில் மார்வல்ஸ் குழுமத்தின் உரிமையாளர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, IPG நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோஹன் மற்றும் LPL தொடரின் தலைவர் சமந்த தொடான்வெல போன்ற முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.