வெடுக்குநாறி மலை சிலைகள் பற்றி வெளியான தகவல்!

0
273

வெடுக்குநாறி மலையில் அமைந்திருந்த ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் மர்ம நபர்களால் உடைத்தெறியப்பட்டிருந்த நிலையில் குறித்த சிலைகள் இன்று மீளவும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், சிலைகள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும் வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்களும் பூஜை பொருட்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு மன்றில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளது.

வெடுக்குநாறி மலை சிலைகள் தொடர்பில் வெளியான தகவல்! | Information About The Statues Of Vedukunari Hill

குறித்த விடயங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட சிலைகளை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் சிலைகள் மீள பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்களை சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதை துரிதப்படுத்துமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடுக்குநாறி ஆதிலிங்கேசுவவர் ஆலய பகுதியில் இருந்த சிலைகளை இன்று மீளவும் அதே இடங்களில் நிறுவுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.