ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருப்பதாகவும் அவர் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியேயும் சென்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இருப்பிடம் மற்றும் அவரது உடல்நிலை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து தனது கடமைகளை மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் நிறைவேற்றுகிறார். மேலும் அவர் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியேயும் பயணம் செய்கிறார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை காரணமாக சில பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சனி மற்றும் ஞாயிறு உட்பட நாட்டில் நிலவும் நிலைமை குறித்து பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தான் வசிக்கிறார்” என்று பிரசன்ன ரணதுங்க கூறினார்.
ஜனாதிபதி வெளியில் பயணம் செய்வதை யாரும் பார்க்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பதிலளித்தார். ஜனாதிபதி அங்கும் இங்கும் பயணிப்பதை நாங்கள் பார்க்கவில்லை.

நாங்கள் பார்த்ததெல்லாம் தொலைக்காட்சியில் ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதைத்தான் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, “ஜனாதிபதி கண்ணுக்கு தெரிவதில்லை” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.