மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு 27-ஆம் திகதியன்று 5.4 லட்சம் பீப்பாய்களை எட்டியது.
இது 2022-க்குப் பிறகு அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த அதிகளவு கச்சா எண்ணெய் ஆகும் என கெப்ளா் ஆய்வு நிறுவனத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
இதனால் அக்டோபா் மாத்தில் அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு ஒரு நாளைக்கு 5.75 லட்சம் பீப்பாய்களாகவும் நவம்பரில் ஒரு நாளைக்கு 4 லட்சம் முதல் 4.5 லட்சமாகவும் இருக்கும் என நிபுணா்கள் தெரிவித்தனா்.
ரஷியாவில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டாா்.
ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா கடந்த 22-ஆம் திகதி பொருளாதாரத் தடை விதித்தது. இதன் தொடா்ச்சியாக ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா விரைவில் நிறுத்திக்கொள்ளும் என டிரம்ப் பலமுறை கூறி வருகிறாா்.
இந்தச் சூழலில் அமெரிக்காவுடனான வா்த்தக உறவை சீரமைக்கும் நோக்கில் அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகளின் பட்டியலில் ரஷியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.



