தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு இந்தியாவும் துணை நின்றது – அருட்தந்தை சத்திவேல் பகிரங்கம்

0
263

இலங்கையில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு இந்தியாவும் துணை நின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும் மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என இன்று (01.08.2023) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனை தீர்வு தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த பொலிஸ் அதிகாரம் அற்ற 13 ஆம் திருத்த யோசனையை வடகிழக்கு அரசியல் தலைமைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு

இது வடகிழக்கு தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு. இதற்கு நீண்ட தியாக வரலாறு உள்ளது. வடகிழக்கு பூமியின் பாரம்பரிய வரலாற்றுத் தொன்மை, அரசியல் வரலாறு, இதனை அழிக்க துடிக்கும் பேரினவாதம், இதற்கு எதிராக தொடரும் வடகிழக்கு மக்கள் போராட்டம் என இந்த விடயத்தில் போதிய தெளிவின்மையோடு மலையக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிப்பதும் அவர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை கொச்சைப்படுத்துவது போன்று கருத்து தெரிவிப்பதும் அரசியல் சிறுபிள்ளைத்தன செயலாகும்.

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு இந்தியாவும் துணை நின்றது - அருட்தந்தை சத்திவேல் பகிரங்கம் | Tamils Crisis Sri Lanka Political North East

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்காக, பாரம்பரிய தமிழர் பூமியை அபகரிப்பதற்கு எதிராக, இராணுவத்தினரின் தொடரும் ஆக்கிரமிப்புக்கு எதிராக, சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு எதிராக வட கிழக்கின் இன்றைய இளம் தலைமுறையினரும் வீதியில் நின்று போராடி கொண்டிருக்கின்றனர்.

இப் போராட்டங்களில் முன்வைக்கப்படும் கோஷங்கள் சர்வதேச ரீதியில் நீதிக் கதவை தட்டிக் கொண்டிருக்கையில் இளம் தலைமுறையினருக்கு தற்போதைய தேவை 13 என்பதும் அவர்களுக்கு தேவை அரசியல் அல்ல அடிப்படை பொருளாதார மற்றும் அபிவிருத்திகள் என்று கூறுவது போராட்ட மக்களை அவமானப்படுத்தும் செயலாம்.

வடகிழக்கு மக்களின் வரலாற்று ரீதியிலான அரசியல் உரிமைக்கான போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் தகைமை தமக்கு இல்லாவிட்டால் அமைதி காப்பதே நல்லது. தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா முன்வைத்த 13ஆம் திருத்தத்தை 36 வருடங்களுக்கு முன்னரே அவர்கள் நிராகரித்து விட்டனர். அவ்வாறு அவர்கள் செய்ததாலேயே இந்தியாவும் இனப்படுகொலை செய்ததோடு 2009 இனப்படுகொலைக்கும் துணை நின்றது.

மிகப்பெரிய இன அழிப்பு

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு இந்தியாவும் துணை நின்றது - அருட்தந்தை சத்திவேல் பகிரங்கம் | Tamils Crisis Sri Lanka Political North East

இனப்படுகொலை இன அழிப்பு என்பவற்றை சந்தித்தும் தமது அரசியல் கொள்கை பிடிப்பிலிருந்து விலகி கொள்ளாதவர்கள் எதிர்கால சந்ததியினர் சுதந்திர காற்றை அனுபவிக்க வேண்டும் என தமக்கான அரசியல் தீர்வு எதுவென வெளிப்படுத்தி அதற்காக முன் நின்று ஆழமான கருத்துக்களை முன்வைத்து நிற்கையில் அதனை இழிவு படுத்துபவர்கள், அவமானப்படுத்துபவர்கள் ஒடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்.

ரணிலின் அரசியல் நரி தந்திரத்தில் வீழ்த்தும், பேரினவாதிகளோடும், இந்தியாவோடும் சேர்ந்தே பயணிப்போம் என்பதை காட்டவும் இளம் சந்ததியினரை காரணம் காட்டி வடகிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக நிற்பது அரசியல் நாகரீகம் அல்ல. மலையக மக்கள் பல்வேறு முகம் கொண்ட இன அழிப்பை மிக நீண்ட காலமாகவே சந்தித்து வருகிறார்கள்.

அதில் மிகப்பெரிய இன அழிப்பு 1964ல் சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தமுடன் நடந்தேறியது. இதனை இந்திய இலங்கை அரசுகள் ஏற்றுக் கொள்ள வைப்பதும், மலையக மக்களுக்கான அரசியல் நீதியை பெற்றுக் கொடுக்க இரு அரசுகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய காலகட்டம் இது.

அதற்காக தான் தாயக பூமியில் நின்று போராடி கொண்டிருப்பவர்களோடு தமக்கென ஒரு அங்குல நிலமேனும் இல்லாத மலையக மக்கள் சார்பாக எவ்வாறு கூட்டு சேரலாம்? எவ்வாறு தனித்து இயங்கலாம்? என்பது தொடர்பில் மலையக கட்சிகள் கூட்டாகவும், வடகிழக்கு கட்சியோடும் கலந்து உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும் மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்.