வவுனியாவில் களைகட்டிய ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!

0
256

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்றாகும். நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலின் மூலம் ஆடிப்பிறப்பின் பெருமைகளை நாம் அறிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இதன்போது சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

வவுனியாவில் களைகட்டிய ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்! | In Vavuniya Adi Pirappu Celebration

இந்நிகழ்வில் மாநகரசபை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன், முன்னாள் நகரசபை தலைவர் இ. கௌதமன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஆடிப்பிறப்பை முன்னிட்டு கூழ், கொழுக்கட்டையும் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிபிறப்பு பாடல்

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தம் தோழர்களே!

கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச்

செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,

வாசப்பருப்பை அவித்துக்கொண்டு

நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே  சக்கரையுங்கலந்து,

தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி

சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி

வெல்லக் கலவையை உள்ளே இட்டு

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு

மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா

வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே

குத்து விளக்குக் கொளுத்தி வைத்து

அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து

மடித்ததைக் கோலிக்கொண்டு

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்

நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தந் தோழர்களே

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!