கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 140 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிவான் விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் சாட்சியமளிக்க பொரளை கனத்தை ஊழியர்கள் இருவர், நீதிமன்றுக்கு வந்திருந்த போதும் அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லையெனவும், அவர்களது சாட்சியங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி பதிவு செய்யப்படவுள்ளது.
இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டர், தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படும் அவரது நிறுவனமொன்றின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றும் கிரிஸ் பெரேரா ஆகியோரின் சாட்சியங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினேஷ் ஷாப்டர் குடும்பத்தார் சார்பில் குறித்த சாட்சி விசாரணைகளை திறந்த மன்றில் முன்னெடுக்காது நீதிவான் உத்தியோகபூர்வ அறையில் முன்னெடுக்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாட்சிப்பதிவுகளின் போது, தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தாரின் நலனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.