நாணயத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியா!

0
308

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட்டால் நாட்டை வேகமாக முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசின் 1350 கோடி ரூபாய் நன்கொடையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ நேற்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் கொண்டாட நாம் தீர்மானித்தோம். அந்த வேலைதிட்டத்தை நாம் இந்த கலாசார மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றோம்.

நாயணத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியா! | If One Side Of The Coin Is Sri Lanka Side Is India

இது எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொடுத்த பரிசு ஆகும். அதனால் அவருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிப்பதே நான் செய்யும் முதல் விடயம். இந்தியாவும் இலங்கையும் முன்னெடுத்து வரும் வேலைதிட்டங்களில் பிரதானமானதொரு அம்சம் இதுவாகும். வலு சக்தி தொடர்பிலும் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம்.

அதுபோலவே எமது பொருளாதார நெருக்கடியின்போது இந்த கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நாம் பாராட்டுகின்றோம்.

இக்கலாசார மையம் ஒரு பொதுவான மையமாகும். நான் எப்போதும் கூறுவேன் எம்மிடையேயுள்ள கலாசாரத்தை வேறு பிரிக்க முடியாது என்று. ஒரு நாயணத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியாவாகும்.எம்மிடமுள்ளது ஒரு கலாசாரம். அதனை நாம் பாதுகாத்து மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அதனால் இந்த மையத்தை பொதுமக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு உங்கள் அனைவர் சார்பிலும் இந்தியாவுக்கும் இந்தியாவின் பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.