நூற்றுக்கணக்கான ஹமாஸ், ஜிஹாதிகள் கைது: இஸ்ரேல் அறிவிப்பு

0
277

ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 200 உறுப்பினர்களைக் கடந்த வாரம் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. விசாரிப்பதற்காகக் கைது செய்யப்பட்டோரைத் தனது வட்டாரத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது.

கைதான சந்தேக நபர்கள் சிலர் பொதுமக்களுக்கு மத்தியில் ஒளிந்துகொண்டிருந்ததாகவும் அவர்கள் தாமாகவே சரணடைந்ததாகவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது. போர் தொடங்கியதிலிருந்து 700 பாலஸ்தீன பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

போரில் பொதுமக்கள் இறப்பதைத் தவிர்க்கத் தான் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியிருந்தது. அதிக மக்கள்தொகை இருக்கும் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கிக்கொள்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

அக்டோபர் மாதம் 7 ஆம் திகதியன்று ஹமாஸ் அமைப்பினர் காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

அந்தத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 240 பேர் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பதிலடியாக இஸ்ரேல் இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்தது வருகிறது.

காஸாவில் இதுவரை 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், குறைந்தது 53,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் தலைமையில் இயங்கும் அப்பகுதியின் சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெள்ளிக்கிழமை மட்டும் மேலும் 201 பேர் உயிரிழந்ததாகவும் 368 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது எல்லா இலக்குகளையும் அடையும் வரை இஸ்ரேல் போரைத் தொடரும் என்று நெட்டன்யாகு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.