ஈரானில் புனித நகரம் என கொண்டாடப்படும் கோமில் பாடசாலை சிறுமிகளுக்கு விஷ வாயு செலுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை அமைச்சர் ஒருவரே புகாராக தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் பெண்களுக்கு கல்வியை முடக்குவதே நோக்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே கோம் நகரில் பாடசாலை சிறுமிகள் விஷ வாயு சுவாசித்ததாக தகவல் வெளியானதுடன் சில சிறுமிகள் மருத்துவ சிகிச்சையையும் நாடியுள்ளனர்.
ஞாயிறன்று இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள துணை சுகாதார அமைச்சர் யூனெஸ் பனாஹி, விஷ வாயு வேண்டுமென்றே செலுத்தப்பட்டது என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பாடசாலை சிறுமிகளுக்கு விஷ வாயு அளிக்கும் நடவடிக்கையானது உண்மையில் பெண்களுக்கான பாடசாலைகளை மூடுவதே இலக்காக கொண்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிப்ரவரி 14ம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஒன்று திரண்டு நகர ஆளுனரிடம் விளக்கம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்த நாள் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.