இலங்கை மற்றும் சில மூன்றாம் மண்டல பொருளாதாரங்கள் அதிகரித்துள்ள கப்பல் போக்குவரத்துக்கான செலவுகள் மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுவரும் தாமதங்களால் பாரிய நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளன.
செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஏமன் ஹூதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதை அடுத்து பல கப்பல் நிறுவனங்கள் தமது சரக்குகளை கொண்டு செல்லும் பாதையை திசை திருப்பி வருகின்றன. இது உலக வர்த்தகத்தில் பாரிய விளைவை ஏற்படுத்துகிறது.
இலங்கை, கிரீஸ், ஜோர்தான் மற்றும் பல்கேரியா போன்ற நாடுகள் சூயஸ் கால்வாய் வழியாக வழக்கமான பாதையில் செல்லாமல் ஆப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட பாதையைத் தேர்வு செய்வதால் கப்பல்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதாகவும் மற்றும் நீட்டிக்கப்பட்ட விநியோக நேரங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் Bloomberg Economics செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளாவிய கடல் வர்த்தகத்தில் 14% கையாளும் முக்கியமான கப்பல் பாதையான செங்கடல், இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கிறது.
இந்த இடையூறுகள் ஒரு புதிய பணவீக்க அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் இது உலகளவில் பொருட்களின் விலைகளை பாதிக்கிறது என்றும் புளூம்பெர்க் கூறுகிறது. செங்கடலின் பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை இடையூறுகள் பல மாதங்களுக்கு நீடிக்கலாம்.
செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க இங்கிலாந்து, பஹ்ரைன், கனடா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து ஒரு பணிக்குழுவை அமெரிக்கா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.