பட்டப்பகலில் பயங்கரம்; காதல் விவகாரத்தில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை

0
32

இந்தியா தூத்துக்குடி மாவட்டத்தில் 24 வயது இளைஞனை காதல் விவகாரத்தில் சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (24 வயது), எலக்ட்ரீசியன். இவரும் திருச்செந்தூரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்வற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், மணிகண்டனுடன் சென்ற சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் நேற்று காலை வேலைக்காக பைக்கில் புறப்பட்டு திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மணிகண்டன் காதலித்த சிறுமியின் 16 வயது தம்பி மற்றும் அவனது நண்பர்களான 16 வயதுடைய 2 பேர் வழிமறித்தனர்.

மேலும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உயிருக்கு பயந்து பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த மரக்கடைக்குள் தஞ்சமடைந்தார்.

ஆனாலும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று மரக்கடைக்குள் பதுங்கியிருந்த மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து 3 சிறுவர்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலறிந்ததும் திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மணிகண்டன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் மணிகண்டனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய சிறுமியின் தம்பி உள்பட 3 சிறுவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் வாலிபரை சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.