பலஸ்தீன போராளிகளின் கடும் எதிர்ப்பு: போர் உக்கிரம்!

0
277

வடக்கு காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக இஸ்ரேலியப் படை பலஸ்தீன போராளிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது.

காசாவுக்கு மேலும் உதவிகளை வழங்கும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. எனினும் அந்தத் தீர்மானம் போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தத் தவறியுள்ளது.

வடக்கு நகரான ஜபலியாவில் கரும்புகை வெளிவந்த வண்ணம் இருந்ததோடு இஸ்ரேலின் வான் மற்றும் செல் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் வீசிய வெடிக்காத இரு ஏவுகணைகளை பயன்படுத்தி அந்தப் பகுதியில் உள்ள ஐந்து இஸ்ரேலிய டாங்கிகளை அழித்ததாகவும் படையினரை கொன்று மற்றும் காயப்படுத்தியதாகவும் ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் சுரங்கப்பாதைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சுரங்கப்பாதைகள் வழியாக தோன்றும் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய துருப்புகள் மீது சூடு நடத்துவதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன போராளிகளின் கடும் எதிர்ப்புக்கு : போர் உக்கிரம் | To The Fierce Opposition Of Palestinian Militants

கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்ட எட்டு வீரர்களில் சிலர் ஏவுகணை மற்றும் ரொக்கெட் தாக்குதல்களால் பலியானதாகவும் சிலர் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் அந்த இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.

வடக்கு காசாவில் முன்னேற்றம் கண்டதாக இஸ்ரேல் கூறியபோதும் அங்கு இஸ்ரேல் தனது படைகளை தொடர்ந்து இழந்து வருவதோடு காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் காசா மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

மறுபுறம் பலஸ்தீனர்களில் ஹமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் நபர்களை விசாரிக்க இராணுவம் கைது செய்து இஸ்ரேல் அழைத்துச் செல்கிறது.

இப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்புமாறு ஹமாஸ் உலக அமைப்புகளை வலியுறுத்தி வருகிறது.