யாழில் கடும் மழை; சரிந்தது வரலாற்று பொக்கிஷம் வாய்ந்த மந்திரி மனை

0
27

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக வரலாற்று சிறப்புவாய்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

மந்திரிமனை கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதனை அடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்ததுடன் மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையிலையே இன்றைய தினம் (17) கடும் மழையால் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது மந்திரி மனை.

இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. மந்திரி மனை கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவை.

யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வரலாற்று பிரசித்தி பெற்றவை என்பதுடன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றிலும் மந்திரி மனைக்கு தனிச்சிறப்புண்டு. 

இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் வரலாற்று பொக்கிஷங்களில் ஒன்றாக திகழ்ந்த மந்திரிமனை இடிந்துள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.