தென் கொரியாவில் குழந்தை பெற்றால் 72,000 அமெரிக்க டொலர்!

0
21

தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக கூறப்படுகின்றது.

பூ-யுங் போன்ற கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள், ஊழியர்களுக்குக் குழந்தை பிறப்பிற்காக இத்தகைய பெரிய நிதிச் சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியோலை தளமாகக் கொண்ட பூ-யுங் நிறுவனம், அதன் ஊழியர் ஒவ்வொரு குழந்தை பெற்றெடுக்கும் போதும் நிபந்தனையின்றி சுமார் 72,000 அமெரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் சுமார் 21 மில்லியன் ரூபா) நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

இதற்கு அரசு வரி விலக்கு அளிக்கிறது. இந்த மானியங்களைப் பெற்ற சுமார் 100 ஊழியர்களில் எவரும் நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை, மேலும் இது குழந்தைகளைப் பெற ஊழியர்களை ஊக்குவிப்பதாக நிறுவனம் நம்புகிறது.

தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 0.75 வீதமாகக் குறைந்துள்ளது. இது உலகிலேயே மிகக் குறைந்த விகிதமாகும். இதன் காரணாமக தென் கொரியாவில் 2072 ஆம் ஆண்டில் மக்கள்தொகை மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகக் குழந்தைப் பிறப்பை ஊக்குவிப்பது தென்கொரிய அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருந்து வருகிறது, மேலும் அரசாங்கம் இதற்குப் பல பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. 2030 க்குள் பிறப்பு விகிதத்தை 1 வீதமாக உயர்த்துவதே இலக்காகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.