ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை விடுவித்து வருகிறார்கள்.
4 நாள் போர் நிறுத்தத்தின்போது ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள் என்ற அடிப்படையில் பிணைக்கைதிகளை விடுவிக்கின்றனர்.
இதன்படி நேற்றைய தினம் 3-வது கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட 4 வெளிநாட்டினர் என 17 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த 4 வயதான அபிகெய்ல் ஈடன் என்ற சிறுமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி இஸ்ரேல் – அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார்.
கடந்த மாதம் 7-ம் திகதி ஹமாஸ் பயங்ரகவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இவரது வீட்டிற்குள் நுழைந்து தந்தை மற்றும் தாயை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதன்போது அபிகெய்ல் ஈடன் பக்கத்து வீட்டில் சென்று தஞ்சம் அடைந்துள்ளார். பக்கத்து வீட்டிற்குள்ளும் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த குடும்பத்துடன் இவரையும் சேர்த்து பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து மூன்று குழந்கைகள், குழந்தைகளின் தாய் மற்றும் ஈடன் ஆகிய ஐந்து பேரும் காணாமல் போனர். பின்னர் பிணைக் கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் சிறுமி அபிகெய்ல் ஈடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில்,
“கடவுளுக்கு நன்றி, அந்த சிறுமி வீட்டில் இருக்கிறார். அவளை கட்டிப்பிடித்து சந்தோகத்தை வெளிப்படுத்த அங்கே இருக்க விரும்புகிறேன். அவள் இஸ்ரேலில் பத்திரமாக இருக்கிறாள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு இன்னும் அதிகமான பிணைக் கைதிகளை விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.