டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசின் அதிரடி முடிவு

0
23

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அன்றாட பணப்பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அரசாங்கம் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி, 5000 ரூபாவிற்கும் குறைவான LankaQR மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு எவ்வித மேலதிக கட்டணங்களையும் வசூலிக்காதிருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

5000 ரூபாவிற்கு குறைவான தொகையை QR குறியீடு ஊடாக அனுப்பும் நபரிடமிருந்தோ அல்லது அதனைப் பெறுபவரிடமிருந்தோ எந்தவொரு மேலதிகக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

தற்போது 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கைபேசி செயலிகள் மூலம் Lanka QR வசதி செயல்பாட்டில் இருந்தாலும், அதன் பயன்பாடு இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் Lanka QR ஊடாக சுமார் 1.18 பில்லியன் ரூபா பெறுமதியான 274,000 பரிமாற்றங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இது மாதத்திற்குச் சராசரியாக 90,000 பரிமாற்றங்கள் மட்டுமேயாகும். பெரும்பாலான QR பணப் பரிமாற்றங்கள் 5,000 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்படுவதால் இந்த புதிய சலுகை மூலம் மக்கள் பணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளுக்கு அமைய டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.