500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு

0
30

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர்களது என சந்தேகிக்கப்படும் சொத்துக்களே அதிகளவில் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது சொத்துக்களை பொறுப்பேற்று பராமரிப்பதற்காக விசேட அதிகார சபையொன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.