இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை தாம் அறிவதாகவும் ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பதாகவும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (6) காலை கண்டியில் உள்ள மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஞானசார தேரர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இதன்போது ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இதை பொறுப்புடன் சொல்கிறேன். எனக்கு மூளையாகச் செயல்பட்டவரைத் தெரியும். ஆனால் நான் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை. நான் ஊடகங்களுக்கு சொல்ல முன்னர் நாட்டின் ஜனாதிபதிக்கு மற்றும் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளவர்களுக்குச் சொல்லுவேன் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 8 தற்கொலை குண்டுதாரிகள் அடங்களாக 277 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.