மாறிவரும் உலக அரச ஒழுங்கில் இலங்கையில் ஈழத்தழிழர் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பிற்கு எதிராக உலகத்தின் பார்வையை கொண்டுவருவதற்கு வெறுமனே ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் போதுமானவையல்ல.
மாறாக இனவழிப்பு, போர்க்குற்றம் நடைபெற்றதை நிரூபிக்கும் வகையில் ஆதரங்களை திரட்டி அவற்றினை சர்வேதச சமூகத்தின் முன் வைக்க வேண்டியது ஈழத்தமிழினத்தின் பாரிய பொறுப்பாகும்.
1958இல் இருந்து இன அழிப்புக்கான ஆதாரங்கள் உண்டு. 2009 இற்கும் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கல் தொடர்கிறது. இதுபற்றிய விடயங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை.
புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழ் தரப்பினர் மேற்கொண்டுவருகின்ற போராட்டங்கள் இலங்கை மீதான அழுத்தங்களை வலுப்படுத்தினாலும், இலங்கைக்கு எதிராக சர்வதேசம் திரும்புவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் ஆதரங்கள் முக்கியமானவை.
ஆயர் இராயப்பு யோசேப்பு செய்ததை எவரும் செய்யவில்லை
ஒரு நிகழ்வை நிரூபிப்பதற்கு அது நடந்ததற்கான சுவடுகள் காணப்படும் போது அதனை இலகுவில் அடையாளம் காண முடியும். சட்ட நடவடிக்கையிலும் ஆதாரங்களும் சாட்சிகளும் வலுவாக காணப்படும் போது பாதிக்கப்பட்ட தரப்பிற்கான நீதியினை அடைந்துவிட முடியும்.
2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தரப்பின் அரசியலானது வெறுமனே கோச அரசியலாக மாறியதேயன்றி, இலங்கை அரசினால் ஈழத்தமிழினம் மீதான இனவழிப்பை எடுத்துக்காட்டும் அல்லது இனவழிப்பிற்கு எதிரான நடவடிக்கையை நிரூபிப்பதற்கான இராஜதந்திர ரீதியான நகர்வுகளை முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தொியவில்லை.
மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு, இனவழிப்பு இடம்பெற்றதற்கான சாட்சிகளையும் ஆதாரங்களையும் திரட்டியதுடன், அவற்றினை சர்வதேசத்தின் பார்வைக்கும் அனுப்பிவைத்திருந்தார்.
ஆனால், அவரின் மறைவிற்கு பின்னர் அந்த செயற்பாடு மந்தநிலையை அடைந்துள்ளது என்று தான் கூறமுடியும். தாயகத்தில் தமிழ் சிவில் அமைப்பினரால் மேற்கொள்ளபடுகின்ற பேரணிகள், போராட்டங்கள் அரசாங்கத்திற்கு தற்காலிக அழுத்தங்களை கொடுக்குமேயன்றி சர்வதேச ரீதியாக பாரியளவான அழுத்தை ஏற்படுத்தாது.
சர்வதேச தலைவர்களின் தலையீட்டை கோர வேண்டும்
சர்வதேச சமூகத்தைப் பொறுத்தமட்டில் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை கொண்டே ஈழத்தமிழினத்திற்கு எதிரான இனவழிப்பின் அளவினை பார்க்கின்றனர். இவையே சர்வதேசம் இலங்கை தொடர்பான அழுத்தங்களுக்கும் வலுச் சேர்க்கும்.
தாயகத்தில் உள்ள இனப்பற்றாளர்கள், சிவில் அமைப்பினர் இனவழிப்பின் ஆதாரங்களை தேடி அவற்றை புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஊடாக சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் தமக்கான அரசியல் இருப்பிற்குத் தேவையான விடயங்களில் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்களேயன்றி மக்களின் அரசியல் விடுதலை, அநீதிக்கு எதிராக இலங்கையை சர்வதேசத்தின் முன்கொண்டு சென்று நியாயம் கேட்கும் வேலைத்திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள் என்று தான் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
தேர்தல் வியூகங்களை மாத்திரமே வகுக்கின்றனர்
ஆகவே, புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்தமிழ் சமூகம், சர்வதேச மாநாடுகள், மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டங்களின் போது சர்வதேச தலைவர்களின் தலையீட்டைக் கொண்டுவருதற்கான காரியங்களை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஜெனீவா மனித உாிமைகளை பேரவையில் இருந்து ஈழத்தமிழா் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்யும் அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் தேர்தல் வியூகங்களுடன் மாத்திரம் செயற்படுகின்றமை மிகப் பெரும் பலவீனமாகும்.