வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்த அயல்நாடு, வெளிநாடுகள் உதவி செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளர். மேற்படி கோரிக்கையை நேற்று (11) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை முன்னெடுத்தவர்களை அநாகரிக முறையில் தூக்கிவீசி கைது செய்து வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனமாகக் குழப்பிய காவல்துறையினரின் படுபாதகச் செயலைக் கண்டித்தும் மற்றும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நல்லூர் ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

இந்த சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்கள் மீதும் அவர்கள் வழிபாட்டு இடங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீதிமன்ற கட்டளையை மதிக்காத நாடாகவே எமது நாடு விளங்குகின்ற நிலையில் இதனை அருவருக்கத்தக்கதாகவே நாங்கள் உணருகின்றோம்.
அத்தகைய நீதியைத்தான் நாங்கள் அடுக்கடுக்காக கண்டுகொண்டு இருப்பதுடன் இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல மற்றும் அரசுக்கும் ஆரோக்கியமானதல்ல.

வெடுக்குநாறி மலை
எனவே நாங்கள் எங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்காக எத்தகைய முயற்சிகளை நாங்கள் எடுப்பதுடன் இதனை அயல்நாடு மற்றும் வெளிநாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
மேலும் காந்தி தேசமும் பார்த்துக் கொண்டிருப்பதுடன் வெளிநாடுகள் ஒன்றிணைந்து நாம் உரிமையுடன் வாழ வழி செய்ய வேண்டும் இல்லையெனில் அதுவரை ஜனநாயக முறையில் போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.