ஆஸ்திரேலியா 77 வயதான முதியவர் ஒருவரை அவரது செல்லப் பிராணியான கங்காரு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்மாண்ட் நகரில் வசித்து வந்த 77 வயதான முதியவர் ஒருவர் வனவிலங்கான கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் நின்று கொண்டிருந்த அந்த முதியவரை கங்காரு பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் அந்த முதியவர் பலத்த காயம் அடைந்த நிலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆம்புலன்சை வரவழைத்தனர்.
இருப்பினும் ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்களை அந்த முதியவரை நெருக்கவிடாமல் கங்காரு பல இடையூறுகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொலிஸார் அந்த கங்காருவை சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர் மருத்துவ ஊழியர்கள் அந்த முதியவரை ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டனர்.
ஆனால் அதற்குள் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செல்லப்பிராணியாக வளர்த்த முதியவரை கங்காரு தாக்கி கொன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 5 கோடி கங்காருக்கள் இருந்தாலும் மனிதனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானவை.
அந்த வகையில் 1936க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கங்காரு தாக்கி மனிதன் உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.