இந்திய தரப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே காங்கேசன்துறை மற்றும் இந்தியா இடையிலான படகு சேவை எதிர்பார்த்தபடி இயங்கவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்துடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இலங்கை 570 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;
”எங்களால் ஒரு கையால் கைதட்ட முடியாது. படகு போக்குவரத்திற்கு இந்தியாவின் ஆதரவு அவசியம். படகுகளை வழங்குவதனை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்த விடயத்தில் சிறிது தாமதமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
அத்துடன், துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது அவசியம் எனவும் அமைச்சர் கூறினார். கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் 04 கொள்கலன் முனையங்களை அமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த கொள்கலன் முனையங்கலில் முதலீடு செய்வதற்கு தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தினார்.