ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய சக மாணவர்கள்!

0
315

சென்னையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் கல்லூரி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான சத்தியமூர்த்தி என்ற மாணவன் சென்னையில் உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.

இதே கல்லூரியில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவர்களுடன் சத்தியமூர்த்திக்கு கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி இன்று வந்துள்ளார். இதன்போது சத்தியமூர்த்தியைச் சுற்றி வளைத்த 8 பேர் கொண்ட கும்பல், கத்தியால் சரமாரியாக சத்தியமூர்த்தியை வெட்டியுள்ளது.

இதில் அவர் படுகாயமடைந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் அங்கு ஈடுபட்டிருந்த ரயில்வே பொலிஸார் அக்கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய சக மாணவர்கள்! | Chennai Fellow Students Attacked College Student

இதையடுத்து படுகாயமடைந்த சத்தியமூர்த்தியை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து ரூட்டு தல விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் மாணவர் ஒருவர் கத்தியால் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.