யால பூங்காவில் பட்டாம்பூச்சிகளை திருடிய தந்தை மகன்: 60 மில்லியன் ரூபாய் அபராதம்

0
145

இலங்கையின் யால யாலா தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகளான தந்தை மற்றும் மகனுக்கு 60 மில்லியன் இலங்கை ரூபா ($200,000; £150,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

68 வயதான லூய்கி ஃபெராரி மற்றும் அவரது 28 வயது மகன் மாட்டியா ஆகியோரை இவ்வாறு பட்டாம் பூச்சிகள் கொண்ட ஜாடிகளுடன் சரணாலய அதிகாரிகளினால் கடந்த மே மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்து அவர்களை விசாரணை நடத்தியதில் அரிய வகை பட்டாம் பூச்சிகளை பிடித்து அதை நவீன தொழிநுட்ப முறை கொண்டு மெழுகாக்கி உறையவைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பட்டாம் பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தல், வைத்திருத்தல் மற்றும் கொண்டு செல்லுதல் ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு வனவிலங்கு குற்றங்களுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள யாலா தேசிய பூங்கா இலங்கையின் மிகவும் பிரபலமான வனவிலங்கு பூங்காக்களில் ஒன்றாகும். இது சிறுத்தைகள், யானைகள் மற்றும் எருமைகள் மற்றும் பிற விலங்குகளின் அதிக செறிவுகளைக் கொண்டுள்ளது.

கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான லூய்கி ஃபெராரி அவரது நண்பர்களால் பூச்சி ஆர்வலர் என வர்ணிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இத்தாலியின் வடக்கில் உள்ள மொடெனாவில் உள்ள பூச்சியியல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.