சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில் ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில் துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய முறையைப் பாதுகாப்பதற்கும் விசேட அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இவ்வாறு கூறினார்.
சுதேச மருத்துவத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைமைத்துவத்துடன் “பொடி மன்த்ர” உடல் மந்திரங்கள் என்ற பெயரில் ஆயுர்வேத ஆரோக்கிய மையங்களை சுதேச வைத்தியத்துறைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.