கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு; புலிகளின் சைனைட் போத்தல், இலக்கத் தகடுகள் மீட்பு

0
277

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று ஏழாவது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில், சைனைட் குப்பி ஒன்றும் விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடுகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மூன்று மனித உடல் எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் சைனைட் குப்பி ஒன்றும் இலக்கத் தகடு இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

“இந்த அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான கால வரையறையை சொல்ல முடியாது. அடுக்கடுக்காக உலகங்கள் காணப்படுகின்றன. இந்த அகழ்வு பணியில் எடுக்கப்பட்ட மனித அச்சங்கள் தொடர்பான அறிக்கையினை குழு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். குறித்த அகழ்வு பணிக்காக 5.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலமே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்த வாரமும் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்” என்றும் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ் தெரிவித்தார்.

இந் நிலையில் ஏழாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (13) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ் , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.