பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மறுமணத்தில் மத விதி மீறல் குற்றச்சாட்டு

0
237

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 2018-ம் ஆண்டு புஷ்ரா பீபி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

இந்த மறுமணத்தில் மத விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது முஸ்லிம் மத சட்டப்படி ஒரு பெண்ணின் கணவர் இறந்தாலோ அல்லது அவர் திருமண முறிவு ஏற்பட்டாலோ அந்த பெண் மறுமணம் செய்து கொள்ள 3 மாத காலம் காத்திருக்க வேண்டும்.

இந்த காலத்தை இத்தாத் காலம் என்பார்கள். ஆனால் இம்ரான்கான் புஷ்ரா பீபியை இத்தாத் காலம் முடியும் முன்பே மறுமணம் செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

பொது வெளியில் இந்த தகவல் பரவியதால் இவர்களுக்கு நடந்த திருமணம் மதவிதி மீறல் எனவும் இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுமீதான விசாரணை நீதிமன்றில் நடந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் மதகுரு முப்தி முகமது சயீத் கூறியதாவது,

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் திருமணம் இத்தாத் காலத்தில் தான் நடந்தது. இத்திருமணத்தை நடத்தி வைக்க என்னை இம்ரான்கான் லாகூர் அழைத்து சென்றார்.

அங்கிருந்த பெண் ஒருவர் திருமணத்திற்கான அனைத்து நிபந்தனைகளும் சரியாக உள்ளது எனக்கூறியதால் நான் திருமணத்தை நடத்தி வைத்தேன் என்றார்.

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இம்ரான்கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.