மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ராஃபா எல்லை திறக்கப்படும் என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்தார். இதனை அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து – காஸா எல்லைப் பகுதியான ராஃபா எல்லைப் பகுதி புதன்கிழமை திறக்கப்படும். அதன் வழியாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் முதல் குழு காஸாவைவிட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
காஸாவில் சிக்கிக் கொண்டிருக்கும் பிரித்தானிய நாட்டவர்களுக்கு அந்த நாட்டின் குழுக்கள் ஏற்கெனவே உதவி வருகின்றன. பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் உடனடியாகப் போக வேண்டும் என அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காஸா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பலஸ்தீனம் தெரிவித்துள்ளது.



